போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.

Update: 2024-05-20 18:30 GMT

கோப்புப்படம்

சென்னை,

வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் களம் இறங்கினார்கள். டெல்லி திகார் சிறைக்கு சென்று அவரிடம் அதிரடி விசாரணையும் நடத்தினார்கள்.

ஜாபர் சாதிக்கின் நண்பரான திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோரும் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பி அவரை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன், இயக்குனர் அமீருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி அதிரடி சோதனையும் நடத்தினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம், உங்கள் கணவர் ஜாபர் சாதிக் போதை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தது உங்களுக்கு தெரியுமா? போன்ற பல கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை விவரம் அனைத்தும் 'வீடியோ' பதிவு செய்யப்பட்டது. அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் அவருக்கு விதிக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவிடம் இருந்து முக்கிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்