மனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

ஏற்காட்டில் மன வளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-04-10 22:00 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் ஏற்காடு ஆணைக்காடு அருகே உள்ள வெள்ளைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் பூச்சி. இவரது மகன் தீர்த்தகிரி (வயது 32). இவர் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

ஏற்காடு பெரியேரிகாடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 17 வயதான மனவளர்ச்சி குன்றிய மகள் கடந்த 4.10.2015 அன்று வீட்டில் தனியாக இருந்தாள்.

இதை தெரிந்து கொண்ட தீர்த்தகிரி நைசாக வீட்டிற்குள் சென்று சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீர்த்தகிரியை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமியை பலாத்காரம் செய்த தீர்த்தகிரிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார், தீர்த்தகிரியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆயுள் தண்டனை பெற்ற தீர்த்தகிரிக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்