முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி வினாடிக்கு 1,400 கனஅடி நீர் வெளியேற்றம்

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Update: 2019-04-12 22:00 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏரிக்கு, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம். கடந்த ஜனவரி மாதத்தில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால், வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

அதன்பின்னர் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மற்றும் சென்னை குடிநீருக்காகவும் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது. அதாவது கடந்த வாரம் 43.20 அடியாக நீர்மட்டம் இருந்தது. ஏரியில் 39 அடிக்கும் குறையாமல் நீர் இருப்பு இருந்தால் தான் இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்.

இதற்கிடையே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்பது கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்து வருவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இதனால், சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதில் ஒருபகுதியாக தான் வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை குறையவிடாமல், பார்த்துக்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக கல்லணையில் இருந்து கடந்த 4-ந்தேதி கீழணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. 8-ந்தேதி கீழணையை வந்து சேர்ந்தவுடன், அங்கிருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து அதே அளவில் தண்ணீர் வரத்து இருந்து வருவதால் ஏரி தனது முழுகொள்ளளவான 47.50 அடியை நேற்று எட்டியது. தொடர்ந்து உருத்திரசோலை மதகு வழியாக வினாடிக்கு 100 கன அடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மூலமாக வெள்ளாற்றில் வினாடிக்கு 1,300 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1,400 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 59 கன அடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதால், கீழணையில் இருந்து வடவாறு வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று இரவுக்குள்(அதாவது நேற்று) குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 15-ந்தேதி முழு கொள்ளளவை ஏரி எட்டியது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் 2-வது முறையாக தற்போது நிரம்பி இருக்கிறது. தற்போது விவசாயத்திற்கு தண்ணீர் தேவை என்பது இல்லை என்பதால், சென்னை குடிநீர் தேவைக்காக தான் கோடையில் ஏரி நிரப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் ஏரியில் நீர் நிரம்பி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஏரி பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு இந்த தண்ணீர் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்