மேட்டுப்பாளையத்தில் துணிகரம் பறக்கும்படை அதிகாரி போல் நடித்து வியாபாரியிடம் நகை-பணம் பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

மேட்டுப்பாளையத்தில் பறக்கும்படை அதிகாரி போல் நடித்து வியாபாரியிடம் நகை-பணம் பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-12 23:00 GMT
மேட்டுப்பாளையம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்க கட்டிகள், நகைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் பறக்கும்படை அதிகாரி போல் நடித்து வியாபாரியிடம் நகை-பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ராமகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). வியாபாரி. இவர் கடந்த 7-ந் தேதி மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சடையம்பாளையம் அருகே ஒருவர் ஆறுமுகத்தை வழிமறித்துள்ளார். பின்னர் அந்த நபர் தான் பறக்கும் படை அதிகாரி என்றும் உங்களை சோதனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் வியாபாரி என்றும், பணம் எதுவும் அதிகமாக கொண்டு செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.இருப்பினும் அந்த மர்ம நபர் ஆறுமுகம் வைத்திருந்த செல்போனை பிடுங்கியதுடன், அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.800 ஆகியவற்றை பறித்துள்ளார். பின்னர் அந்த நபர் சிறிது தூரம் தள்ளி ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. நீங்கள் அங்கு வந்து பணம், செல்போன் மற்றும் நகையை வாங்கி கொள்ளலாம். இல்லையென்றால் போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஆறுமுகம் அந்த நபர் கூறிய இடத்திற்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு போலீஸ் ஜீப் எதுவும் இல்லை. அப்போதுதான் தன்னை ஏமாற்றி அந்த நபர் பணம் மற்றும் நகையை பறித்து சென்றதை ஆறுமுகம் உணர்ந்தார். இதையடுத்து அவர் தனது ஊர் பொதுமக்களிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆறுமுகம் கூறியது போல் மர்ம நபர் யாராவது அந்த பகுதியில் சுற்றித்திரிகிறாரா? என்று தேடினர். அந்த மர்ம நபர் யார் கண்ணிலும் சிக்கவில்லை.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஆறுமுகம் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர் திலக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பறக்கும்படை அதிகாரி போல் நடித்து வியாபாரியிடம் பணம், நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி வியாபாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்