தபால் வாக்கு சீட்டு வழங்காததை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், தேர்தல் பணியை புறக்கணிக்க முடிவு

தபால் வாக்கு சீட்டு வழங்காததை கண்டித்து பயிற்சியை புறக்கணித்துவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 17-ந் தேதிக்குள் வழங்கவில்லையெனில் தேர்தல் பணியை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-04-13 22:30 GMT
பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நேற்று சட்டமன்ற தொகுதி வாரியாக 3-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த நிலையில் ஏற்கனவே 2-வது கட்ட பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டு போடாதவர்கள் நேற்று நடந்த பயிற்சியின் போது தபால் ஓட்டுப்போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் பல்வேறு இடங்களில் நடந்த பயிற்சியின் போது அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை பதிவு செய்தார்கள்.

அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 275 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு விழுப்புரம் அய்யூர்அகரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் சுந்தர்ராஜன் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிலர், தேர்தல் அதிகாரிகளிடம் சென்று தங்களுக்கு இன்னும் தபால் வாக்கு சீட்டு வழங்கப்படவில்லை, எப்போது வழங்குவீர்கள் என்று கேட்டனர். அதற்கு விரைவில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறுகையில், ஏற்கனவே 2 கட்ட பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் தற்போது 3-ம் கட்ட பயிற்சி நடந்து வருகிறது. ஆனால் இன்னும் தபால் வாக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்று கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்தல் பயிற்சி வகுப்பை புறக்கணித்துவிட்டு வெளியே வந்த அவர்கள், அந்த பயிற்சி மையத்தின் நுழைவுவாயில் முன்பு திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, வருகிற 17-ந் தேதிக்குள் அனைவருக்கும் தபால் வாக்கு சீட்டு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறுகையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தேர்தல் பணியில் மொத்தம் 1,650 பேர் ஈடுபடுகின்றனர். எங்களில் இதுவரை 380 பேருக்கு மட்டுமே தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 75 சதவீத பேருக்கு இன்னும் தபால் வாக்கு சீட்டு வழங்கப்படவில்லை. வருகிற 17-ந்தேதிக்குள் எங்களுக்கு தபால் வாக்கு சீட்டு கிடைக்கவில்லையெனில் 18-ந் தேதியன்று தேர்தல் பணியை புறக்கணிப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்