விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை மோடி தள்ளுபடி செய்து உள்ளார் முத்தரசன் குற்றச்சாட்டு

விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை மோடி தள்ளுபடி செய்து உள்ளார் என்று, சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2019-04-14 23:00 GMT
சீர்காழி,

நாடாளுமன்றம், சட்டமன்றம், ரிசர்வ்வங்கி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்தும் அரசியலைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறது. தற்பொழுது தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஆணையமாக இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியினர் சுமார் ரூ.650கோடி வினியோகம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர்.

ஆனால் தேர்தல் ஆணையம் பணம் கொடுப்பதை தடுப்போம் என கூறிவருவது வேடிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் காப்பாற்ற வேண்டும். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். இந்தியா மதசார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு. அமித்ஷா இந்தியாவை விட்டு கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என கூறிவரும் மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. டெல்டா பகுதியில் கஜா புயலால் ஏராளமான தென்னை மரங்கள், விளைநிலங்கள், வீடுகள், கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பை பிரதமர் நேரில் பார்வையிடவில்லை. அ.தி.மு.க. கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல. சந்தர்ப்பவாத கூட்டணி.

மாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டம் டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வெற்றிபெரும். இதேபோல இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்