3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு

கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

Update: 2024-05-05 06:18 GMT

புதுடெல்லி:

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (வயது 45), கொலை வழக்கில் இந்தியர்கள் மூன்று பேரை கனடா காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அமெரிக்க சட்ட அமலாக்க ஏஜென்சிகளுடன் பணிபுரிந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்டூரோ "கனடா நாடு சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு" என்றார். மேலும், நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு என்றும் தெரிவித்தார்.

நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் நிராகரித்தது. இந்த விவகாரத்தால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது கைது நடவடிக்கையை ட்ரூடோ நியாயப்படுத்தி பேசியிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-

தேர்தல் நடைபெற உள்ள கனடாவில் இப்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உள்நாட்டு அரசியல். இந்த கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காலிஸ்தான் ஆதரவு மக்கள் கனடாவின் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஒரு லாபியை உருவாக்கி வாக்கு வங்கியாக மாறியுள்ளனர். மேலும், கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருக்கின்றன.

இரு நாடுகளுக்கும், இரு நாட்டு உறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய நபர்களுக்கு விசா, சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்லது அரசியல் இடத்தை வழங்க வேண்டாம் என்று நாங்கள் பலமுறை கனடாவிடம் கூறினோம். ஆனால் கனடா அரசாங்கம் எதையும் செய்யவில்லை. காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேரை நாடு கடத்தும்படி இந்தியா கோரிக்கை வைத்தது. அதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

கனடா எந்த ஆதாரத்தையும் தரவில்லை. சில வழக்குகளில் அவர்கள் எங்களிடம் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. காவல்துறை விசாரணை அமைப்புகளும் எங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. அரசியல் நிர்பந்தம் காரணமாகவே இந்தியாவை குறை கூறுகிறார்கள். கனடாவில் தேர்தல் வருவதால் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்