நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடந்தது. இதனை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

Update: 2019-04-14 22:45 GMT
தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் இருசக்கரவாகனங்களிலும் மற்றும் பேரணியாகவும் சென்றனர். எனவே அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையை செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை, மாற்றுத்திறனாளியின் வாக்கு முதல்வாக்கு ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், தஞ்சை மாவட்ட தேசிய பார்வையற்றோர் சம்மேளன பொதுச்செயலாளர் ராஜூ, தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்