கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது; புதுவையில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. புதுவையில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது.

Update: 2019-04-14 21:45 GMT
புதுச்சேரி,

மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும்.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் பொருந்தும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீன்பிடி தடைகாலம் என்பது 45 நாட்களுக்கு இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக அதை 60 நாட்களாக உயர்த்தி மத்திய-மாநில அரசுகள் நிர்ணயித்தது. அதன்படி, இன்று நள்ளிரவு தொடங்கும் மீன்பிடி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

மீன்பிடி தடைகாலம் நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். மாறாக 20 குதிரை திறனுக்கும் குறைவான கண்ணாடி இழை (பைபர்) படகுகளின் மூலம் குறைந்த தூரத்துக்கு சென்று சிறிய அளவிலான மீன்களை பிடித்து வருவார்கள். மீன்பிடி தடைகாலத்தால் இனி வரக்கூடிய நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாத காலங்களில் மீன்பிடி தடைகாலத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுவையிலும் மீன்பிடி தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று இரவு முதல் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அந்தந்த மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

புதுவையில் வீராம்பட்டினம், தேங்காய் திட்டு, வைத்திக்குப்பம் உள்பட 18 மீனவ கிராமங்கள் உள்ளன. மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதையொட்டி மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏரிகளில் பிடிக்கப்பட்ட மீன்களின் விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் சூடு பிடிக்கும்.

மேலும் செய்திகள்