மதவெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: அண்ணாமலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை நீட்டிப்பு

அண்ணாமலை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-04-29 22:56 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, அண்ணாமலைக்கு சேலம் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை சார்பில் வக்கீல் எம்.ஏ.சின்னசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி விசாரித்தது. அப்போது இந்த மனுவுக்கு பதில் அளிக்க பியூஷ் மனுசுக்கு உத்தரவிட்டதுடன், அண்ணாமலைக்கு எதிராக சேலம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் இறுதி வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை தரப்பில் வக்கீல் சின்னசாமி, பியூஸ் மனுஷ் சார்பில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகினர். இந்த வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், 'இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அண்ணாமலைக்கு அனுமதி அளித்து, பதில் மனு தாக்கல் செய்ய எதிர் மனுதாரர் பியூஷ் மனுசுக்கு 6 வாரம் அவகாசமும், விளக்க மனு தாக்கல் செய்ய அண்ணாமலைக்கு 6 வாரம் அவகாசமும் அளித்து, விசாரணையை செப்டம்பர் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். மேலும் அண்ணாமலைக்கு எதிராக சேலம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு விதித்த இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்