பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி : இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது கோர்ட்டு

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2024-04-29 23:17 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்.

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. தண்டனை விவரங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். இவருடைய மனைவி நிர்மலா தேவி (வயது 54). ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார். இவர் தன்னிடம் படிக்கும் சில மாணவிகளிடம் செல்போனில் பேசி, நான் சொல்லும் சில வழிமுறைகளை கேட்டால் உங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறி, மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயன்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அனைத்து விசாரணையும் நிறைவடைந்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு முருகன், கருப்பசாமி, கோர்ட்டில் ஆஜர் ஆகினர்.

இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு உட்கார வைக்கப்பட்டு இருந்தார். மதியம் 1 மணி அளவில் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசித்தார். அப்போது காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

பின்னர் அரசு வக்கீ்ல் சந்திரசேகரன், நிர்மலாதேவி தரப்பு வக்கீல் சுரேஷ் நெப்போலியன் ஆகியோர் வாதிட்டனர். வழக்கில் இருந்து நிர்மலாதேவியையும் விடுவிக்க அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் மறுநாள் (அதாவது இன்று) மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பதால், அவரை போலீஸ் வாகனத்தில் பலத்த காவலுடன் அழைத்துச் சென்று போலீசார் மதுரை சிறையில் அடைத்தனர். சிறை தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதால் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்புக்கு பின்னர், இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சந்திரசேகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை கோர்ட்டு வழங்கி உள்ளது. முதல் குற்றவாளியான நிர்மலா தேவி மீது இந்திய தண்டனைச்சட்டம் 370 (1), 370 (3), 5 (1)ஏ, 9, 67 ஆகிய 5 பிரிவுகளின்படி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த விடுதலையை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிக்கு தண்டனையை குறைக்க வாய்ப்பு அளிக்கும்படியும், இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதால். ஒரு நாள் அவகாசம் வழங்கி தண்டனை விவர அறிவிப்பை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்