கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே பிணம்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் உறவினர்கள் திடீர் மறியல்

கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர் பிணமாக கிடந்தது குறித்து மனைவி, மாமியார் மீது அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசாரை கண்டித்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-14 22:15 GMT

கண்டமங்கலம்,

கண்டமங்கலத்தை அடுத்த பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பள்ளிபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்கிரண் (வயது 25), புதுச்சேரி கல்மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் மருமகள் சசி என்ற கஸ்தூரி, மாமியார் ஆகியோர் தான் காரணம் என்றும் ராஜ்கிரண் தாயார் வாசுகி கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் முண்டியப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ராஜ்கிரண் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் அடக்க செய்யப்பட்டது.

ராஜ்கிரண் இறந்த தொடர்பாக புகார் அளித்து கண்டமங்கலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்கிரண் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை கண்டித்து மண்டகப்பட்டு ஏரிபாக்கம் ரோடு பள்ளிபுதுப்பட்டு பஸ் நிறுத்ததில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போலீசார் ராஜ்கிரண் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்