மூங்கில்துறைப்பட்டு அருகே, வாலிபருக்கு கத்திக்குத்து - விவசாயி கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே வாலிபரை கத்தியால் குத்திய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-15 21:45 GMT
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் வெங்கடேசன் (வயது 35). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன் தனக்கு சொந்தமான ஆடுகளை அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது விளை நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி பழனி(56) என்பவர், வெங்கடேசனிடம் எதற்காக விளை நிலத்தில் ஆடுகள் மேய்க்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் ஒரு ஆட்டை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடினார்.

உடனே வெங்கடேசன், அவரை மடக்கி பிடித்து ஏன் ஆட்டை தூக்கி செல்கிறீர்கள் என தட்டிக்கேட்டார். அப்போது அங்கு வந்த பழனியின் மனைவி முனியம்மாளும், பழனியும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கியதாக தெரிகிறது. மேலும் பழனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனை குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முனியம்மாளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்