பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் ரூ.1 லட்சத்தை சாலையில் போட்டுவிட்டு 2 பேர் ஓட்டம்

அலங்காநல்லூரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தவர்கள், தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் சாலையில் ரூ.1 லட்சத்தை போட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-04-15 22:15 GMT

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனையில் பல கோடி ரூபாய் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூரில் தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் மலர்விழி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலங்காநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைமேட்டு தெரு பகுதிக்கு சென்றனர். அங்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் பணப்பட்டுவாடா செய்த 2 பேர் வாக்காளர் பட்டியல் மற்றும் கைப்பையை அப்படியே சாலையில் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றும், அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் சாலையில் போட்டுவிட்டு சென்ற கைப்பையை சோதனை செய்தபோது, அதில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரி மலர்விழி கைப்பற்றி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுபா தலைமையிலான குழுவினர் நேற்று இரவில் விளாத்திகுளம் அருகே கோடாங்கிபட்டியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.18 லட்சத்து 6 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் விசாரணையில், காரில் வந்தவர் விளாத்திகுளம் அம்பாள் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், கட்டிட ஒப்பந்ததாரருமான செல்வராஜ் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்