பர்கூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய வீரப்பன் கூட்டாளி கைது

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதி போதமலையில் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

Update: 2019-04-17 22:45 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதி போதமலையில் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பாறை மீது 5 மூட்டைகளுடன் 7 பேர் நின்று கொண்டிருந்தனர்.

வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் மூட்டைகளையும், ஒரு நாட்டு துப்பாக்கியையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பித்து ஓடினார்கள்.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பி ஓடியவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த குட்டி வீரப்பன் என்கிற சரவணன் (வயது 47) என்பதும், அவர் சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளி என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை பிடிக்க பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வனத்துறையினர் பிடிவாரண்டு பெற்றனர். இதையடுத்து வனத்துறையினர் கோவிந்தப்பாடி சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் 7 பேரும் 2 நாட்டு துப்பாக்கிகளுடன் பர்கூர் வனப்பகுதிக்கு வந்து மானை வேட்டையாடி இறைச்சியை கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சரவணனை வனத்துறையினர் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்