திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 50 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது 85 நோட்டுகள் பறிமுதல்

திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண் வியாபாரியிடம் கள்ளநோட்டை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 85 நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-20 22:15 GMT
திருச்சி,

திருச்சி வடக்குதாராநல்லூரை சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி. இவர் திருச்சி காந்திமார்க்கெட் அருகே பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பாக்கியலெட்சுமி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் வந்து ஒருவர் பழங்களை வாங்கி விட்டு ரூ.50-ஐ கொடுத்தார்.

அந்த நோட்டு வித்தியாசமாக இருந்ததால் அது கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர்களிடம் பாக்கிய லெட்சுமி நோட்டை காண்பித்தார். அவர்கள் நோட்டை பார்த்துவிட்டு அது கள்ளநோட்டு என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், அந்த நபரை பிடித்து வைத்து கொண்டு காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் கள்.

விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரை சேர்ந்த வாகித் பாஷா(வயது 42) என்பதும், அவரிடம் மேலும் 50 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவரிடம் இருந்த 85 கள்ள ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்று, அவருக்கு கள்ளநோட்டுகள் கிடைத்தது எப்படி? என்று போலீசார் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கரையை சேர்ந்த அப்துல்சுக்கூர் என்பவர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து கள்ள நோட்டுகளை அச்சிடப்பயன்படுத்திய பிரிண்டிங் மிஷின், வெள்ளைத்தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் சிறையில் இருந்தபோது, வாகித்பாஷாவும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது சிறையில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்துல்சுக்கூர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் மீண்டும் கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவதற்காக வாகித்பாஷாவிடம் கொடுத்தது தெரியவந்தது.

வாகித்பாஷா ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு காந்திமார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டுகளை மாற்றியுள்ளார். தற்போது அவர் மீண்டும் கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சித்தபோது, கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வாகித்பாஷாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்துல்சுக்கூரை போலீசார் தேடி வரு கிறார்கள்.

இந்த சம்பவம் திருச்சி காந்திமார்க்கெட் பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்