ராஜாக்கமங்கலம் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த சகோதரர்கள் கைது

ராஜாக்கமங்கலம் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-30 23:00 GMT
ராஜாக்கமங்கலம்,


ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் கதிரவன்(வயது 39). இவருடைய சகோதரர் மணிகண்டன். இவர்கள், வடக்கு கன்னக்குறிச்சி பகுதியில் ஓலை பட்டாசு தயாரிப்பதற்கு அரசின் அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால், இவர்கள் கன்னக்குறிச்சியில் வைத்து பட்டாசு தயாரிக்காமல் ஆறுதெங்கன்விளையில் உள்ள மணிகண்டன் வீட்டில் வைத்து தயாரித்து வந்தனர். மேலும், கோவில் விழாக்களுக்கு பட்டாசு தயாரித்து கொடுத்து வந்தார்.


இந்தநிலையில் நேற்று இதுபற்றி நீண்டக்கரை ‘பி‘ கிராம நிர்வாக அலுவலர் உஷாதேவிக்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

 அதன்பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், அவர்கள் அங்கு தீவிர சோதனை செய்தனர். சோதனையில் 3 சாக்குமூடைகளில் ஓலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் ½ கிலோ வெடிமருந்து ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்த கதிரவன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்