உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 6–ந்தேதி வெளியிடப்படும் - கலெக்டர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 6–ந்தேதி வெளியிடப்படும் என கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

Update: 2019-04-30 22:59 GMT

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி வரைவு பட்டியல் கடந்த 23–ந்தேதி அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் தகவலுக்காக உரிய முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 2016–ம் ஆண்டு நடைபெற இருந்த சாதாரண உள்ளாட்சி தேர்தலுக்கு 7 நகராட்சிகளில் 450 வாக்குச்சாவடிகளும், 9 பேரூராட்சிகளில் 160 வாக்குச்சாவடிகளும், 11 பஞ்சாயத்து யூனியன்களில் 2,109 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 2,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தற்போது வெளியிடப்பட்டு உள்ள 2019 வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலின்படி 7 நகராட்சிகளில் ராஜபாளையத்தில் 112 வாக்குச்சாவடிகளும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 66 வாக்குச்சாவடிகளும், அருப்புக்கோட்டையில் 72 வாக்குச்சாவடிகளும், சிவகாசியில் 62 வாக்குச்சாவடிகளும், சாத்தூரில் 43 வாக்குச்சாவடிகளும், விருதுநகரில் 61 வாக்குச்சாவடிகளும், திருத்தங்கலில் 25 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் நகரசபை பகுதிகளில் 441 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

9 பேரூராட்சிகளில் ரெட்டியார்பட்டியில் 15, சேத்தூரில் 18, மல்லாங்கிணறில் 15, மம்சாபுரத்தில் 19, காரியாபட்டியில் 15, சுந்தரபாண்டியத்தில் 12, எஸ்.கொடிக்குளத்தில் 15, வ.புதுப்பட்டியில் 15, வத்திராயிருப்பில் 18 ஆக மொத்தம் 145 வாக்குச்சாவடிகளும், 11 பஞ்சாயத்து யூனியன்களில் அருப்புக்கோட்டையில் 154, விருதுநகரில் 284, காரியாபட்டியில் 149, திருச்சுழியில் 162, நரிக்குடியில் 177, ராஜபாளையத்தில் 207, ஸ்ரீவில்லிபுத்தூரில் 152, வத்திராயிருப்பில் 117, சிவகாசியில் 320, வெம்பக்கோட்டையில் 209, சாத்தூரில் 181 ஆக மொத்தம் 2112 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் மொத்தம் 2,698 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்து உள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் கூடுதலாக அமைக்கப்பட இருக்கும் வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். மேலும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கவோ, அல்லது அருகில் உள்ள நல்ல கட்டிடங்களை தேர்வு செய்யவோ ஆலோசனைகள் இருந்தால் நாளைக்குள் (2–ந்தேதி) அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கைகள் அளிக்கலாம்.

இது தொடர்பாக வரும் ஆட்சேபனைகள், கருத்துகளை பரிசீலித்து தேவைப்பட்டால் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு வருகிற 4–ந்தேதி அனைத்து வாக்குச்சாவடி வரைவு பட்டியல் இறுதி செய்யப்பட்டு இந்த இறுதிப்பட்டியல் வருகிற 6–ந்தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்