இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
துணை ஜனாதிபதி வருகை: ராமேஸ்வரத்தில் டிரோன்கள் பறக்க தடை
காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மெக்சிகோவில் ரெயில் தடம்புரண்டு விபத்து - 13 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ நாட்டின் இண்டர்ஓஷெனிக் ரெயில் நிசாண்டா நகரத்தின் ரெயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், 9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து 2,76,000க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து 276க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது.
சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரெயில்களின் நேரம் மாற்றம்
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஆந்திரா: ஓடும் ரெயிலில் தீ விபத்து - பயணி உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் ரெயிலின் பி1, எம்1 ஆகிய இரு ஏ.சி. பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் பயணி உயிரிழந்தார். சில பயணிகள் தீ விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.