கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் இன்று ஆஜராகின்றனர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update:2025-12-29 09:33 IST

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதற்கிடையில் கரூர் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக வருகிற 29-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகுமாறு த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, த.வெ.க. நிர்வாகிகள் 4 பேரும் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான த.வெ.க. தரப்பு விளக்கங்களை அளிக்க உள்ளனர். இதேபோல் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோருக்கும் சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களும் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு சென்று தங்களது தரப்பு விளக்கங்களை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லிக்கு செல்ல இருப்பதால் கரூர் கூட்ட நெரிசல் வழக்கானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்