துணை ஜனாதிபதி வருகை: திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
திருச்சி,
புதுச்சேரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (திங்கட்கிழமை) காலை ராணுவ விமானம் மூலம் புதுடெல்லியில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகிறார். அப்போது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு புதுச்சேரி செல்கிறார். விழா முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் மாலை திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் இங்கிருந்து ராணுவ விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
இதையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் விமான நிலைய வளாகம் மற்றும் பயணிகளின் உடைமைகள் போன்றவற்றை சோதனை செய்து வருகின்றனர்.