தஞ்சை தனியார் மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு அனுப்ப மறுப்பதாக கூறி உறவினர்கள் தர்ணா

தஞ்சை தனியார் மருத்துவமனையில், பணத்துக்காக பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு அனுப்ப மறுப்பதாக கூறி உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2019-05-01 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தொம்பன்குடிசை பிரகதாம்பாள் நகரை சேர்ந்தவர் சேக் அப்துல்லா. ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் ரெஜினா பானு (வயது 22). சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி முகமது ஹக்கீம் என்பவருக்கு தனது மகளை சேக் அப்துல்லா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.

ரெஜினாபானு, சோதனை குழாய் மூலம் கருவுற்றார். இதற்கு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் தலைப்பிரசவம் என்பதால் அவர் தஞ்சைக்கு வந்தார். தஞ்சையில் உள்ள ஒரு டாக்டரிடம் காண்பித்து வந்தார்.

இதனையடுத்து அந்த டாக்டர் ஆலோசனைப்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள என்.எம். மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கடந்த 8-ந் தேதி 2 குழந்தைகள் பிறந்தன.

குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் ஐ.சி.யூ. வார்டில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான கட்டணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மருத்துவமனை நிர்வாகத்துக்கு சேக் அப்துல்லா குடும்பத்தினர் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் பிரசவித்த பெண்ணையும், குழந்தைகளையும் ‘டிஸ்சார்ஜ்’ செய்ய கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் மேலும் ரூ.1½ லட்சம் கட்டுமாறு கூறியதாகவும், பணத்தை கட்டி விட்டு ரெஜினாபானுவையும், குழந்தைகளையும் அழைத்துச்செல்லுங்கள் என்று கூறியதால் அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ரெஜினாபானுவையும், அவரது குழந்தைகளையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து ரெஜினாபானு மற்றும் அவரது குழந்தைகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் தஞ்சையில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் தாமரைச்செல்வி கூறியதாவது:-

ரெஜினாபானு கர்ப்பமான 7-வது மாதத்தில் பனிக்குடம் உடைந்ததால் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவர் சோதனை குழாய் மூலம் கருத்தரித்துள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 2 குழந்தைகளையும் காப்பாற்றி, 20 நாட்கள் ஐ.சி.யூ. வார்டில் வைத்து சிகிச்சை அளித்தோம். 2 குழந்தைகள், தாய்க்கு சிகிச்சை அளித்ததற்கான மொத்த கட்டணம் ரூ.3½ லட்சம். அவர்கள் ரூ.1½ லட்சம் தான் கட்டினர்.

ஆனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் ரூ.50 ஆயிரத்தை குறைத்துக்கொண்டு மேலும் ரூ.1½ லட்சம் கட்டுங்கள் என்று தெரிவித்தோம். ஆனால் நாங்கள் பணத்தை கட்டினால் தான் குழந்தையை தருவோம், அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறவில்லை. பணத்தை கட்டாததால் சிகிச்சை முடிந்து 5 நாட்கள் ஆகியும் ரெஜினாபானு மருத்துவமனையில் இருந்தார்.

ஆனால் அந்த 5 நாட்கள் நாங்கள் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. அதற்குள் மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதோடு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளோம். 2 குழந்தைகளை காப்பாற்றி கொடுத்ததற்கு எங்களுக்கு கிடைத்த பலன் இது. இது குறித்து சட்டரீதியாக நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம்”என்றார்.

மேலும் செய்திகள்