திருச்சியில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவி உலக சாதனை

திருச்சியில் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி 10 வயது மாணவி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

Update: 2019-05-01 23:00 GMT
திருச்சி,

திருச்சி தில்லைநகரில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக சாதனைக்கான சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 5 வயது முதல் 50 வயது வரையிலானவர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

12 மணி நேரம் இடைவிடாது தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்துக்கு 45 பேர் வீதம் மொத்தம் 378 பேர் பங்கேற்றனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, அலங்கார சிலம்பு உள்பட 72 வகையான பிரிவுகளில் அவர்கள் சிலம்பம் சுற்றினார்கள். இந்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்டதாகும்.

சுகித்தா என்ற 10 வயது மாணவி 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றினார். ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த நடுவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. ‘ஜீனியஸ் ஆப் வேல்டு ரெக்கார்டு’ என்ற புத்தகத்தில் இந்த சாதனை நிகழ்ச்சி இடம்பெற்றது. மாணவி சுகித்தாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் ஜோதீஸ்வரி என்ற 12 வயது மாணவி பிரளை என்ற வகை சிலம்பத்தினை 1,500 முறை சுற்றி புதிய உலக சாதனை படைத்து உள்ளார்.

மேலும் செய்திகள்