ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தவறாமல் தபால் வாக்களிக்க கோரிக்கை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தவறாமல் தபால் வாக்களிக்க வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-05-01 22:45 GMT

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– 100 சதவீத வாக்களிப்பை நிறைவேற்ற பல்வேறு விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திய ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகளை அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஜனநாயக கடமையில் இருந்து தவறியதாகிவிடும்.

இது சமூகத்தில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். முழுமையான வாக்கு பதிவை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் ஆணையத்துக்கு துணை நிற்க வேண்டிய அரசு ஊழியர்கள் வாக்களிக்காமல் இருப்பது தங்களுடைய பணி விதிகளுக்கு முரண்பட்ட செயலாகும்.

மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் வாக்குகள் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் அனைவரும் வாக்கு பதிவு மையங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்களித்து விட்டனர்.

எனவே தபால் வாக்குகள் கைகளில் கிடைக்கப்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கால தாமதப்படுத்தாமல் அவற்றை முறையாக வாக்களித்து, அரசிதழில் பதிவு பெற்ற அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று, உரிய உறைகளில் வைத்து அருகில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் பணமில்லா பதிவு தபாலில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்