தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தி.மு.க. ஆட்சி நடந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2024-04-28 08:34 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில்  கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த 26-ம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு  லாரிகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் லாரிகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான லாரிகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கு  முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. தி.மு.க. ஆட்சி நடந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்