இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: போர்க்களமாக மாறிய அமெரிக்க பல்கலைக்கழகங்கள்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-28 08:53 GMT

வாஷிங்டன்,

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், இங்கிலாந்தும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்த போராட்டம் நியூயார்க் பல்கலைக்கழகம், மினசோட்டா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்,பெர்க்லி தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், டெக்சாஸ்-ஆஸ்டின் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், எமர்சன் கல்லூரி, எம்ஐடி டப்ட்ஸ் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், தி நியூ ஸ்கூல் லாஸ் ஏஞ்சல் என 15 பல்கலைக்கழகத்திற்கு பரவியுள்ளது. இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அமெரிக்கா அரசு காவல் துறைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமான மாணவர்களைபோலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலை கண்டித்து மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இருப்பினும் பல்கலைக்கழகத்தின் விருப்பப்படி, கண்ணீர் புகை குண்டு மற்றும் ஆயுதங்களுடன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக அப்பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கூறுகையில், போலீசார் வந்ததும் போராட்டக்காரர்களை வெளியேறும்படி கூறினர். அது போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஆயுதங்களையும், ரப்பர் புல்லட்களையும் போலீசார் கொண்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்தனர் என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், காசாவில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டம் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆயுதம் வாங்க உதவும் வகையில் அந்நாட்டில் முதலீடு செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்றனர்.

இதேபோல் மற்ற பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் நடக்கிறது. போராட்டம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 550 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்