புனே பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள், மாணவி அணையில் மூழ்கி பலி

சுற்றுலா சென்ற இடத்தில் புனே பல்கலைக்கழக 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி அணையில் மூழ்கி உயிரிழந்தனர்.

Update: 2019-05-02 23:58 GMT
புனே,

புனே பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவ- மாணவிகள் 10 பேர் நேற்று காலை 50 கி.மீ. தொலைவில் உள்ள முல்சி அணைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு அவர்கள் அணையில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். இவர்களில் மாணவர்கள் சுபம் ராஜ் சின்கா (வயது22), சிவகுமார்(22), மாணவி சங்கீதா நெகி(22) ஆகியோர் அணையின் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் 3 பேரும் தத்தளித்தனர். மேலும் உதவி கேட்டு சத்தம் போட்டனர்.

இதைப்பார்த்து பதறிப்போன மற்ற மாணவர்கள் அவர்களை மீட்க போராடினார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்த நிலையில், 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் மூழ்கினார்கள்.

இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தீயணைப்பு படையினர் வருவதற்குள்ளாகவே அந்த பகுதியை சேர்ந்த கிராமவாசிகள் மாணவி சங்கீதா நெகி உள்பட 3 பேரையும் பிணமாக மீட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களில் மாணவி சங்கீதா நெகி டெல்லியையும், மாணவர் சிவகுமார் உத்தரபிரதேசத்தையும், சுபம் ராஜ் சின்கா பீகாரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாசென்ற இடத்தில் அணையில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களுடன் படிக்கும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்