மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகம்: சில்லரை தகராறில் கழுத்தை நெரித்து நண்பர் கொலை 2 பேர் கைது

500 ரூபாய்க்கு சில்லரை மாற்றுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-03 23:00 GMT
செங்குன்றம்,

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 33-வது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் இவருடைய மனைவி ருக்குமணி(30) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகள்கள் தேவிகா, மோனிஷா ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன்பிறகு கந்தசாமி, செங்குன்றத்துக்கு வந்து கூலிவேலை செய்து வந்தார். அங்கேயே குடித்துவிட்டு செங்குன்றம் பஜார் வண்டிமேடு பகுதியில் படுத்து தூங்குவது வழக்கம்.

இதேபோல் செங்குன்றம் எம்.கே.காந்தி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(30). இவரும் குடிபோதைக்கு அடிமையானதால் தனது மனைவி வைத்தீஸ்வரி, மகன்கள் சூர்யா(2), தனுஷ்(5 மாதம்) ஆகியோரை விட்டு பிரிந்து செங்குன்றம் வண்டி மேடு பகுதியில் படுத்து தூங்கி வந்தார்.

அப்போது கந்தசாமி, சந்தோஷ்குமார் மற்றும் செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் அரியாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ்(38) ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டது. 3 பேரும் நண்பர்களானார்கள். 3 பேரும் ஏதாவது கூலி வேலைக்கு சென்றுவிட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடிப்பதும், பின்னர் வண்டிமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதுமாகவும் காலத்தை கழித்து வந்தனர்.

கடந்த மாதம் 30-ந்தேதி ராஜேஷ், தன்னிடம் இருந்த 500 ரூபாயை கந்தசாமியிடம் கொடுத்து சில்லரை மாற்றி வரும்படி கூறினார். அதற்கு கந்தசாமி, 500 ரூபாய்க்கு சில்லரை மாற்றி வந்தால் தனக்கு ரூ.100 கமிஷனாக தரவேண்டும் என்றார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி சில்லரை மாற்றி வந்த கந்தசாமி, 100 ரூபாய் கமிஷன் எடுத்துக்கொண்டு மீதி 400 ரூபாயை ராஜேசிடம் கொடுத்தார்.

அதன்பிறகு கடந்த 1-ந்தேதி ராஜேசின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் இறுதி ஊர்வலத்தில் சந்தோஷ்குமார், ராஜேஷ் இருவரும் கலந்துகொண்டனர். அன்று இரவு இருவரும் குடிபோதையில் தாங்கள் வழக்கமாக படுத்து தூங்கும் மொட்டை மாடிக்கு வந்தனர்.

அப்போது அங்கு போதையில் இருந்த கந்தசாமி, இவர்களிடம் குடிப்பதற்கு மது உள்ளதா? என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், சந்தோஷ்குமார் இருவரும் 500 ரூபாயை மாற்றிவர 100 ரூபாய் கமிஷன் கேட்ட உனக்கு, மது ஒரு கேடா? என கேட்டு அவரை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளினர்.

இதில் கீழே விழுந்த கந்தசாமிக்கு காலில் முறிவு ஏற்பட்டு வலியால் அலறினார். உடனே இருவரும் கீழே இறங்கி வந்து கந்தசாமியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் கந்தசாமி, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடி போலீசாரை நம்ப வைத்தனர்.

செங்குன்றம் போலீசார் கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கந்தசாமி, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சந்தோஷ்குமார், ராஜேஷ் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்