வில்லியனூரில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

வில்லியனூரில் கஞ்சா விற்றதாக கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-03 23:28 GMT

வில்லியனூர்,

வில்லியனூர் ஆச்சார்யாபுரம் பாலத்தின் கீழே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, மங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆச்சார்யாபுரம் பாலம் பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்களை சோதனை செய்தபோது அவர்களின் சட்டைப் பையில் சிறு சிறு பொட்டலங்களாக 51 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 360 கிராம் எடையுள்ள அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அது தொடர்பாக அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் மங்கலம் கணபதி நகரை சேர்ந்த தமிழ்தாசன் (வயது 19), உறுவையாறு ஸ்ரீராம் நகரை சேர்ந்த அஜீத் என்ற மலைச்சாமி (20), ஆச்சார்யாபுரத்தை சேர்ந்த அருண் (19) என்பதும், இவர்கள் 3 பேரும் திருவண்ணாமலையில் கஞ்சாவை வாங்கி வந்து, இங்குள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து தமிழ்தாசன், மலைச்சாமி மற்றும் அருண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்