கோரேகாவில் ஓடும் பஸ்சில் பயங்கர தீ பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கோரேகாவில் நடுரோட்டில் ஓடும் பெஸ்ட் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2019-05-04 00:12 GMT
மும்பை,

மும்பை கோரேகாவ் ரெயில் நிலையம் கிழக்கில் இருந்து நாக்ரி நிவாரா பிரகலாப் பகுதிக்கு நேற்று காலை பெஸ்ட் பஸ் ஒன்று கிளம்பியது. பஸ்சில் 3 பயணிகள் மட்டும் இருந்தனர். பஸ் 7.20 மணியளவில் கோரேகாவ் கோகுல்தாம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் திடீரென ஏதோ வெடித்தது போன்று பயங்கர சத்தம்கேட்டது.

பின்னர் பஸ்சின் முன் பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சுதாரித்து கொண்டு டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர் மற்றும் நடத்துனர் இறங்கி ஓடினர்.

இந்தநிலையில் பஸ் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. பஸ்சில் இருந்த கியாஸ் டேங்க் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரம் என்பதால் பஸ்சில் அதிக பயணிகள் இல்லை.

பஸ்சில் கூடுதல் பயணி கள் இருந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கும் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்