ரேலியா அணையில், ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரேலியா அணையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-05-11 22:15 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை விளங்குகிறது. குன்னூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பந்துமி என்ற இடத்தில் ரேலியா அணை அமைந்துள்ளது. மொத்தம் 43.7 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, கடந்த 1941-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அணை உள்ளதால் பொதுமக்களோ, சுற்றுலா பயணிகளோ அங்கு செல்ல அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க நகராட்சி சார்பில் பகலிலும், இரவிலும் காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ரேலியா அணைக்கு செல்ல அனுமதி இல்லையென்றாலும், அதனை மீறி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு செல்லும்போது அணையில் தவறி விழுவது, நீச்சல் தெரியாமல் குளிப்பது போன்ற நிகழ்வுகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் சிலர் அணையில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் கம்பிசோலை பகுதியை சேர்ந்த 2 மாணவர்கள் நீச்சல் தெரியாததால், அணையில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ரேலியா அணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அவர்கள் ஷாம்பு, சோப்பு போன்றவற்றை பயன்படுத்து வதால் அணையில் உள்ள தண்ணீர் மாசுபடுகிறது.

மேலும் சிலர் வனப்பகுதியில் உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். அப்போது வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் காணப்படுகிறது.

மேலும் வனவிலங்குகள் அவர்களை தாக்க வாய்ப்பு உள்ளது. குன்னூர் மக்களின் குடிநீர் ஆதாரமான ரேலியா அணை மாசுபடாமல் தடுக்கவும், அணை மற்றும் வனப்பகுதிக்கு அனுமதியின்றி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வனத்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்