மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2019-05-13 23:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் ஏ.பி.டி.ரோடு கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 52 வயது ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 10 மற்றும் 11 வயதில் 2 ஆண் குழந்தைகளும், 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மனைவி இறந்ததால் தன்னால் குழந்தைகளை பார்க்க முடியவில்லை என்று கூறி, அலகுமலையில் உள்ள தனியார் விடுதியில் 3 குழந்தைகளையும் சேர்த்தார்.

பின்னர் அவ்வப்போது சென்று அவர்களை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி விடுதிக்கு சென்ற தந்தை, கோவிலுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி, விடுதியில் இருந்து தனது 3 குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தைகளை விடுதியில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அவரின் 12 வயது மகள் அழுதபடியே இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகிகள், அந்த சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி, விடுதியில் இருந்து தங்களை அழைத்து கொண்டு சென்ற தந்தை , திருப்பூர் காதர்பேட்டைக்கு அழைத்து சென்று, இரவு சரக்கு ஆட்டோவில் வைத்து மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், 2 மகன்கள் முன்னிலையில் தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தையை கடந்த 13-2-2014-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரை வருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்