சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Update: 2019-05-15 22:30 GMT
சமயபுரம்,

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் ஐம்பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயாசூரனை சம்ஹாரம் செய்ய பராசக்தி மகா மாரியம்மன் வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக இந்த உற்சவம் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக வரும் பஞ்சப்பிரகார திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வட திருக்காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் தீர்த்தம் கொண்டுவருதல் மற்றும் யானை மேல் தங்கக்குடத்தில் தீர்த்தம் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகா அபிஷேகம்

முன்னதாக கடைவீதியில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் இருந்து 25 வெள்ளிக் குடங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் அர்ச்சகர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து தங்கக்குடத்தில் புனிதநீரை ஊர்வலமாக கொண்டுவந்தார்.

இதைத்தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு கும்ப அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகாஅபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

வெள்ளி விமானத்தில் வீதிஉலா

இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் வெண்ணிற பாவாடை அணிந்து வெள்ளி விமானத்தில் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரத்தில் முதல் சுற்றாகவும், தங்க கொடி மரத்தை 2-வது சுற்றாகவும், தங்க ரதம் வலம் வரும் பிரகாரத்தில் 3-வது சுற்றாகவும், தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மடவாள வீதியில் 4-வது சுற்றாகவும், கீழ ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி ஆகியவற்றில் 5-வது சுற்றாகவும் வீதிஉலா வந்து பஞ்சப்பிரகார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

உற்சவத்தை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று(வியாழக்கிழமை) அம்மன் தங்க சிம்மவாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) முத்துப்பல்லக்கிலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) தங்க கமல வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வாகனத்தில்

வருகிற 19-ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் 20-ந் தேதி வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி காமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அன்னப்பட்சி வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், மேலாளர் ஹரிஹரசுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்