நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டம்

எரிந்த நிலையில் சடலமாக நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-05-04 13:09 GMT

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார். இவர் கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியளவில் கரைசுத்து புதூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, மாயமான ஜெயக்குமார் அருகே உள்ள தோட்டத்தில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நெல்லை எஸ்.பி., டி.ஐ.ஜி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 2 டாக்டர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை நடைமுறைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயக்குமாரின் உடலை வாங்க உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் உடலை வாங்க மறுத்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்