கோடை விடுமுறை முடிவதையொட்டி பள்ளி வாகனங்கள் தீவிர ஆய்வு கல்வி, வருவாய், போக்குவரத்து அதிகாரிகள் நடத்தினர்

கோடை விடுமுறை முடிவதையொட்டி சென்னையில் கல்வி, வருவாய், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2019-05-16 22:30 GMT
சென்னை,

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் பள்ளி கல்வித்துறை, வருவாய் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று சென்னை தெற்கு மண்டலத்தில் உள்ள பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அனைத்து பள்ளி வாகனங்களும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டன.

அங்கு கோட்ட வருவாய் அதிகாரி நாராயணன் மற்றும் மத்திய சென்னை மாவட்ட கல்வி அதிகாரி சுந்தரராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் யுவராஜ் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளி வாகனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களை இயக்கி பார்த்து ‘பிரேக்’ பிடித்தும், தீ அணைப்பானை அடித்தும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை தெற்கு மண்டலத்தில் 176 பள்ளி வாகனங்கள் உள்ளன. தற்போது முதல்கட்டமாக 131 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி வாகனத்தின் உள்புறம் சீராக உள்ளதா? என்றும், தீ அணைப்பான், முதல் உதவி பெட்டி, அவசர கால கதவு உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா? என்றும், நல்ல நிலையில் வாகனம் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பள்ளி வாகனத்தின் ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளோம். இதில் ஆவணங்கள் மற்றும் விதிகள் மீறி உள்ள 13 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள் மீதும், இந்த ஆய்வில் வராத வாகனங்கள் மீதும், ஒரு வாரத்தில் மீண்டும் அடுத்தகட்டமாக ஆய்வு நடத்தப்பட உள்ளது. உரிய விதிமுறைகள் பின்பற்றி சோதனை செய்யப்பட்டு, சான்றிதழ் பெறாத பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்