அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர் நகரில் உள்ள அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-05-17 22:52 GMT
கரூர்,

திருப்பூரில் இருந்து உற்பத்தியாகும் அமராவதி ஆறானது கரூர் நகர் வழியாக பாய்ந்தோடி திருமுக்கூடலூர் எனும் இடத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. மழை வெள்ளக்காலங்களில், கரூர் நகரில் ஓடும் அமராவதி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்ட படி பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயத்தில் ஆற்றிலிருந்து நீரை பாசனத்திற்காக கொண்டு செல்லும் பொருட்டு திருமாநிலையூர் ராஜவாய்க்கால், செல்லாண்டி பாளையம் வாய்க்கால், பிரம்ம தீர்த்தம் ரோட்டிலுள்ள வாய்க்கால், மற்றும் அமராவதி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் பல்வேறு கிளை வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்வது வழக்கமாக இருக்கிறது. கிளைவாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் குப்பைகள் சேர்ந்து காணப்படுவதால் அதன் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அமராவதி ஆற்று பாசனத்தின் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோடைகாலம் முடிவடைந்ததும் பருவமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக தூர்ந்து கிடக்கும் கிளை வாய்க்கால்களை கணக்கீடு செய்து அதனை சுத்தப்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தற்போதைய நாகரிக உலகில் பல்வேறு வேலைகளை எளிதில் செய்து முடித்து விட எந்திரங்கள் வந்து விட்டன. அதே போல், நீர்நிலைகளை தூர்வார பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்களை பயன்படுத்துகிற போதிலும் முழுமையாக தூர்வாருவது என்பது அதிகாரிகள் மற்றும் நீர் நிலைகளை ஒட்டி ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததன் விளைவே நன்னீர் சென்ற வாய்க்கால்களில் கழிவுநீர் செல்வதை பார்க்க முடிகிறது. எனவே கரூர் நகரில் வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் கிளை வாய்க்கால்களை கணக்கெடுத்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரது உதவியுடன் தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்