நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் விற்பனை சூடுபிடித்தது வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் விற்பனை நேற்று சூடுபிடித்தது. வழக்கத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்ததால், அவற்றின் விலை சரிவடைந்தது.

Update: 2019-05-18 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள், பழங்கள் மட்டும் இன்றி, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கூடும்.

நேற்று இந்த சந்தையில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக மாம்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. வரத்து அதிகமாக இருந்ததால், அதன் விலை சரிவடைந்தது. எனவே சந்தைக்கு வந்த பொதுமக்கள் மாம்பழங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்தது.

இது குறித்து சந்தை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளி மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து மாம்பழங்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறோம். இந்த ஆண்டு போதிய மழை பெய்யா விட்டாலும் மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. இதனால் அவற்றின் விலை சரிவடைந்து உள்ளது. எனவே ஒரு கிலோ வாங்கும் நபர்கள் 2, 3 கிலோ வாங்கி செல்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல் வாரச்சந்தையில் நேற்று இமாம் பசந்த் ரக மாம்பழம் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. பங்கனபள்ளி கிலோ ரூ.20-க்கும், கிளிமூக்கு கிலோ ரூ.7-க்கும், சேலம் குண்டு ரகம் கிலோ ரூ.15-க்கும், நீலம் கிலோ ரூ.10-க்கும், மல்கோவா கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்