பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக விழா

பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக விழா நடைபெற்றது.

Update: 2019-05-18 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் 39-வது ஆண்டு வைகாசி விசாக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு பாலமுருகனுக்கு காலை 10.30 மணிக்கு மேல் மஞ்சள், தயிர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பாலமுருகன் உற்சவர் சப்பரத்தேரில் வைக்கப்பட்டு வீதிஉலா நடந்தது. இதில் பெரம்பலூர் மேட்டுத்தெரு, எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, பாரதிதாசன் நகர், மதனகோபாலபுரம், புதிய மதனகோபாலபுரம், முத்துநகர், கம்பன்நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுப்ரமணியர் சன்னதியில் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

மேலும் செய்திகள்