வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-05-18 22:30 GMT
திருச்சி,

வைகாசி விசாகம் என்பது முருக கடவுள் அவதாரம் செய்த நாளாகும். தமிழ் மாதங்களில் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் சிறப்பு நாளாகும். வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இம்மாதத்தில் வைகாசி விசாக திருவிழாக்கள் நடைபெறும்.

நேற்று வைகாசி விசாகத்தையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல்முருகன் கோவிலில் முருகன்- வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே குவிந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மேலரண் சாலையில் மட்டக்கார தெருவில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்ர மணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி 1,008 கலச பூஜை நடந்தது. மேலும் கன்னிகா, சுவாசினி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

வயலூர் முருகன்

இதேபோல் வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை உற்சவர் நடராஜருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் முருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து விசாக நட்சத்திரத்தில் சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சக்தி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி காலை முதலே பக்தர்கள் பால் காவடி, பறவைக்காவடி எடுத்தும், அலகுகள் குத்திக் கொண்டும் வந்து நேர்்த்திக் கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து உற்சவர்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளித்தும், திருவீதி உலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும். 

மேலும் செய்திகள்