திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் விவசாயி வந்ததால் பரபரப்பு

திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் விவசாயி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-19 22:15 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள பாசார் காலனியை சேர்ந்தவர் மருதமுத்து(வயது 60). விவசாயி. இவருடைய மனைவி மலர். இவர்களுடைய மகன் செல்வேந்திரன், மகள் ஜெயலட்சுமி. இந்த நிலையில் அந்த ஊரில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக என்னென்ன செலவு செய்யப்போகிறீர்கள், இது வரையுள்ள வரவு, செலவுகளை காண்பிக்குமாறு மருதமுத்து ஊர் முக்கியஸ்தர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் முக்கியஸ்தர்கள், தேர் திருவிழாவிற்கு மருதமுத்துவை யாரும் அழைக்கக்கூடாது என்றும், அவரும் தேர் திருவிழாவிற்கு வரக்கூடாது என்றும் கூறி உள்ளனர்.

இதில் மனமுடைந்த மருதமுத்து, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக காலனி மக்களிடம் கூறியுள்ளார். மேலும் மண்எண்ணெய் கேனுடன் அவர், தீக்குளிப்பதற்காக திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர், கேனை திறந்து தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொள்ள முயன்றார். இதை பார்த்த போலீசார் ஓடிவந்து, மருதமுத்துவிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் மருதமுத்துவிடம், டி.எஸ்.பி. குணசேகரன் விசாரித்தார். மேலும், இது தொடர்பாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும், இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறி மருதமுத்துவை அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

மேலும் செய்திகள்