ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் - சுற்றுலா பயணிகள் அவதி

கோடை சீசனையொட்டி ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2019-05-20 22:30 GMT
ஊட்டி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி சுற்றுலா பயணிகளுக்காக நீலகிரி மாவட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சொந்த அல்லது வாடகை வாகனங்களில் வருகின்றனர். இந்த வாகனங்கள் அனைத்தும் ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலை வழியாக ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சந்திப்பதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை போலீசார் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அசெம்பிளி திரையரங்கில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் படம் பார்த்தார். இதனால் தாவரவியல் பூங்கா சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அவர்களை நடைபாதையில் நடந்து செல்லுமாறு போலீசார் கூறினர். நடைபாதையில் வரிசையாக கடைகள் வைக்கப்பட்டு இருந்ததால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பெண்கள், முதியவர்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

கோடை சீசனையொட்டி ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலைகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர்.

ஊட்டியில் இருந்து லவ்டேல் சந்திப்பு, பிங்கர்போஸ்ட், மேல் கோடப்பமந்து சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்