வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் 50 சதவீதம் உயர்வு பார்வையாளர்கள் அதிருப்தி

வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவுக்கட்டணம் திடீரென 50 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-05-21 22:45 GMT
வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை கடந்த 1985-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். அப்போது பூங்காவின் நுழைவுக்கட்டணமாக ரூ.2 வசூல் செய்யப்பட்டது. இதனால் மிகக்குறைந்த கட்டணத்தில் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவான பட்ஜெட்டில் குடும்பத்துடன் வந்து செல்லும் மிகப்பெரிய சுற்றுலா தலமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து வந்தது.

நாளுக்கு நாள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த காரணத்தினால் பூங்காவை மேம்படுத்துவதற்காகவும், பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிப்பதற்காகவும் அதிக நிதி தேவைப்பட்டது. இதனால் பூங்காவின் நுழைவு கட்டணத்தை இடையிடையே 3 முறை பூங்கா நிர்வாகம் உயர்த்தியது.

இதற்கிடையே 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வார்தா புயலில் வண்டலூர் உயிரியல் பூங்கா வரலாறு காணாத அளவிற்கு சேதம் அடைந்தது. இதில் பூங்காவில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிந்தன. இதனையடுத்து பூங்கா மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி பூங்கா திறக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வார்தா புயலில் பூங்காவில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் வகையில் உடனடியாக 2017-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியில் இருந்து பூங்காவின் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.50-ஆகவும், சிறியவர்களுக்கு (5 வயது முதல் 12 வயது வரை) ரூ.10-ல் இருந்து ரூ.20-ஆகவும் உயர்த்தப்பட்டது.

கட்டணம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து பூங்காவின் நுழைவு கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக 50 ரூபாயில் இருந்த பெரியவர்கள் நுழைவுக்கட்டணம் தற்போது 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்களுக்கு 20 ரூபாயாக இருந்த கட்டணத்தை 35 ரூபாயாக பூங்கா நிர்வாகம் உயர்த்தி உள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு பலகை, பூங்காவின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளுக்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் அதிக நிதி தேவைப்படும். அதற்காக ஒரேயடியாக 50 சதவீதம் நுழைவு கட்டணத்தை உயர்த்தி இருக்கக்கூடாது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை பூங்கா அதிகாரிகள் பரிசீலனை செய்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்