கொடைக்கானல் தாலுகா அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்ற பா.ஜ.க. பெண் நிர்வாகி - போலீசார் விசாரணை

கொடைக்கானல் தாலுகா அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா கட்சியின் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-21 22:30 GMT
கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அட்டுவம்பட்டியை அடுத்த மாட்டுப்பட்டியை சேர்ந்தவர் ரேகா பவானி பாத்திமா (வயது 41). இவர், பாரதீய ஜனதா கட்சியின் கொடைக்கானல் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு அந்த பகுதியில் அரசால் வழங்கப்பட்ட நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் வீடு கட்டி தனது மகள் ரினோஷாவுடன் வசித்து வருவதாக தெரிகிறது.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ரேகா பவானி பாத்திமா தங்கியுள்ள இடம் தனக்கு சொந்தமானது என கூறி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று மாலை ரேகா பவானி பாத்திமா கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் வீட்டை சிலர் இடித்ததாகவும், தன்னையும், தனது மகள் ரினோஷாவையும் (17) அவர்கள் தாக்கியதாகவும் கூறியிருந்தார். ஆனால் அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து கொடைக்கானல் தாலுகா அலுவலகத்துக்கு ரேகா பவானி பாத்திமா நேற்று மாலை வந்தார். அவர் கையில் பெட்ரோல் கேன் வைத்திருந்தார். திடீரென்று அவர் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே பொதுமக்களும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரும் அவரை தடுத்தனர். அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார். இதனை தொடர்ந்து அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். தாலுகா அலுவலகம் முன்பு பா.ஜ.க. நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்