குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்ய கோரி, மின்வாரிய அலுவலகத்தில் கிராம மக்கள்முற்றுகை

மேலவளவு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அவதியடைந்த கிராம மக்கள், அதனை சரிசெய்ய கோரி நேற்று மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-22 23:00 GMT
மேலூர்,

மேலூர் அருகே மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் டி.வி., மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மோட்டாரை இயக்க முடியாமல் விவசாயிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் கூட அதனை எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சுவதற்கு மின்சாரம் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வருகின்றன. வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள், மின் விளக்குகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு அப்பகுதி கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய வேண்டும் என்று அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்ய வலியுறுத்தி நேற்று மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று மேலூர் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாதவன் ஆகியோர் கூறும்போது, மேலவளவு, அ.வல்லாளபட்டி, திருவாதவூர் ஆகிய 3 இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.அவை இன்னும் 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். அப்போது சீராக மின்சாரம் வினியோகம் செய்யப்படும். தற்போது நிலவும் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும் செய்திகள்