விஜய் பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு: மாற்று இடம் தேர்வு செய்வதில் செங்கோட்டையன் தீவிரம்
ஈரோட்டில் வருகிற 16-ந்தேதி நடத்த திட்டமிட்ட விஜய் பிரசார பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026-ம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறார். அதன்படி புதுச்சேரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிர்வாகிகளுடன் ஈரோடு சம்பத் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கலெக்டர் கந்தசாமியை சந்தித்து வருகிற 16-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு அளித்தார். பின்னர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு வழங்கினார்.
அதன்பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள பவளத்தாம்பாளையம் அருகே தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு ஈரோடு கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது.அனுமதி கிடைத்தவுடன் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பொதுக்கூட்டம் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்”இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஈரோட்டில் நடைபெறும் விஜய் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலர் த.வெ.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு, 16-ந்தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். இதற்கிடையில் விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்ட பவளத்தாம்பாளையத்தில் உள்ள 7 ஏக்கர் காலி இடத்தை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். இடபற்றாக்குறை காரணமாக அங்கு அனுமதி மறுத்த போலீசார் மாற்று இடத்தை தேர்வு செய்யும்படி அறிவுறுத்தினர்.
அதன்பேரில் பெருந்துறை அருகே மாற்று இடத்தை தேர்வு செய்ய செங்கோட்டையன், த.வெ.க. நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஈரோடுமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்வு செய்த மாற்று இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மீண்டும் மனு கொடுக்கப்பட்டது.