தர்மபுரியில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது
போராட்டத்தின்போது காவலரின் கையை தவெக தொண்டர் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த வாரம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பாலக்கோட்டில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பாரை உடனடியாக மூட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இதேபோன்று 12 தனியார் மதுபான பார்களும், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தனியார் மதுபான பார்களையும் திறக்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொள்வதாக கூறியும், இதை கண்டித்தும், அரசு மதுபான கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூடக்கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்த தனியார் மதுபான பாருக்குள் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாரின் தடையை மீறி கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த கட்சி தொண்டர்கள் அரசுக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது போலீசாருக்கும், தவெகவினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளானது. இதில் முற்றுகையிட வந்தவர்களை தடுக்க முயன்ற மகேந்திரமங்கலம் போலீஸ் ஏட்டு அருள் என்பவரது கையை தவெக தொண்டர் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவலருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
பின்னர் தவெகவினர் அந்த பார் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 16 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே போராட்டத்தின்போது போலீஸ் ஏட்டுவின் கையை தவெக தொண்டர் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் போராட்டத்தின் போது காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.