வழிவிடாமல் ஓட்டி சென்றதாக தகராறு: அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை அம்பை அகஸ்தியர்பட்டியை சேர்ந்த தினகரன் (வயது 50) ஓட்டினார். மேலப்பாளையம் அருகே சென்றபோது இந்த பஸ்சை முந்தி செல்ல ஒரு வேன் முயற்சி செய்து உள்ளது. ஆனால் பஸ் டிரைவர் வழிவிடாததால், வேனால் முந்தி செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பஸ் மேலக்கருங்குளம் சோதனை சாவடி அருகே வந்தபோது, வேன் முந்தி வந்து பஸ்சை வழிமறித்தது.
வேன் டிரைவர் வசவப்புரத்தை சேர்ந்த இசக்கிகுமார் மற்றும் சிலர் பஸ் டிரைவர் தினகரனை தாக்கினார்கள். அப்போது பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியும் உடைந்துள்ளது. இதில் காயம் அடைந்த தினகரன், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதே தாக்குதலின் போது காயம் அடைந்த இசக்கிகுமாரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த மோதல் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.