தக்கலை அருகே மாயமான பட்டதாரி பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் பெற்றோர் எதிர்ப்பு– பரபரப்பு

தக்கலை அருகே மாயமான பட்டதாரி பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-31 22:45 GMT
பத்மநாபபுரம்,


தக்கலை அருகே உள்ள பூக்கடை பனங்குழி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் சுகன்யா (வயது 24). இவர் பி.ஏ., படித்து விட்டு பி.எட்., படித்து வருகிறார். இவர் கடந்த 28–ந் தேதி முதல் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தந்தை தக்கலை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுகன்யா தனது உறவுக்காரரான ஆளூர் பெரும்செல்வவிளையை சேர்ந்த சுதன் (27) என்பவருடன் தக்கலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.


விசாரணையில், இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததும், முதலில் சுகன்யாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், பின்னர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகன்யா வெளிநாட்டில் வேலை செய்து வந்த காதலன் சுதனிடம் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 28–ந் தேதி சுதன் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் திட்டமிட்டபடி காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறினர்.

 இந்தநிலையில் போலீசார் தேடி வருவதை அறிந்து காதல் ஜோடியினர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.


மேலும் இருவரும் தங்களை சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டு கொண்டனர். உடனே போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேசினர்.

பெண் வீட்டார் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் காதல் ஜோடியினர் திருமணம் செய்தவதில் உறுதியாக இருந்தனர். மேலும் அவர்கள் மேஜர் என்பதால் போலீசார், இருவீட்டாரையும் சமரசம் செய்து இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்