பால்வள கூட்டுறவு சங்கத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

பால்வள கூட்டுறவு சங்கத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-07-31 23:15 GMT

மதுரை,

தேனியை சேர்ந்த அமாவாசை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

தமிழக அரசின் துணை முதல்–அமைச்சரின் சகோதரர் ஓ.ராஜா, மதுரை ஆவின் தலைவராக உள்ளார். அவர் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள ரோஸிநகர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். அதன் அடிப்படையிலேயே ஆவின் தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்த ரோஸிநகர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கு உடந்தையாக மதுரை ஆவினில் உள்ள உயர் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து மதுரை பால்வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தவறான ஆவணங்களை சமர்ப்பித்து தொடங்கப்பட்ட உப்புக்கோட்டை ரோஸிநகர் பால்வள கூட்டுறவு சங்கத்தின் பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், எனது மனு அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து பால்வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளர், மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 28–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்