தூத்துக்குடியில் குடிநீர் கோரி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

தூத்துக்குடியில் குடிநீர் கோரி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-31 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்துக்கு குடிநீர் தேவைக்காக தாமிரபரணி ஆற்றில் போதுமான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சமீபகாலமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் ஆங்காங்கே சாலைமறியலிலும் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

தூத்துக்குடி புதுத்தெரு பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சமையல் செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் வடக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்த போதும், தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்